முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது குடும்பத்தினர் நல்ல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக நான் 2016 முதல் 2021 வரை இருந்த காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றி ஏதாவது கிராமத்துக்கு பரிந்துரை செய்தால் உடனடியாக அதற்கான அனுமதியைத் தடுத்தவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் இப்போது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஜனநாயகப்படி நடக்க வேண்டும் எனக்கேட்கிறார். எங்களிடம் எந்த பாரபட்சமும் இல்லை.
புதுக்கோட்டைக்கு அரசு பல் மருத்துவக் கல்லூரியை தான் கொண்டு வந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு திறந்துவிட்டு செயல்படாமல் வைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். கொரோனா காலத்தில் நிதியே ஒதுக்காமல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரிவிட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. திறப்பு விழாவுக்குப் பிறகு தற்போது வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தவறான தகவல்களைச் சொல்லி, மனநோயாளியைப் போல மாறிவிட்ட அவரை அவரது குடும்பத்தினர் நல்ல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என நல்லெண்ணத்துடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.