அமெரிக்காவில் அலாஸ்கா விமானத்தில் நடுவானில் தனியாக பெயர்ந்து பறந்த கதவு!

அமெரிக்காவில் 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் வெடித்துப் பறந்ததால் அவ்விமானம் ஓரேகனின் போர்ட்லேண்டில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிகிறது.

போயிங் 737-9 மேக்ஸ் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் அண்டாரியோவுக்கு செல்ல புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவசரமாக போர்ட்லாண்டில் உள்ளூர் நேரப்படி 5.26 மணிக்கு தரையிறக்கப்பட்டது. 16,000 அடியில் உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென தரையிறக்கப்பட்டது என்று தெரிகிறது.

இந்த விபத்து குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில், அந்த விமானத்தின் நடுவில் உள்ள ‘எக்ஸிட் டோர்’ வெடித்து பறந்திருப்பதைக் காணமுடிகிறது. வெளியேறுவதற்காக வைக்கப்பட்ட அந்தக் கதவு அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் பயன்படுத்தப்படாமல் அடைக்கப்பட்டே இருந்தது.

இது குறித்து விமானத்தில் பயணித்தவர்கள், ‘இது ஒரு கொடுங்கனவு’ என விவரிக்கின்றனர். 22 வயது பயணி ஒருவர், “நான் கண் விழித்ததும் முதலில் பார்த்தது எனக்கு முன்னால் இருந்த ஆக்ஸிஜன் மாஸ்கைதான். பின்னர் எனது இடது பக்கம் பார்த்தேன், அந்தப் பக்கம் இருந்த விமானத்தின் கதவு காணாமல் போயிருந்தது. அப்போது நான் இறந்து விடுவேன் என்றுதான் எனக்கு முதலில் தோன்றியது” என்று கூறியிருந்தார்.

விமான பாதுகாப்பு நிபுணர் அந்தோணி பிரிக்ஹவுஸ் கூறுகையில், “அந்தப் பயணிகள் எதிர்கொண்ட பயங்கர அனுபவத்தை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. அந்தச் சம்பவம் பயங்கர சத்தத்துடன் இருந்திருக்கும். காற்று அதிகமாக விமானத்துக்குள் நுழைந்திருக்கும். நிச்சயமாக இது ஒரு பயங்கரமான சூழ்நிலை தான்” என்று தெரிவித்திருந்தார். இந்த விமானம் 2023 நவம்பரில் சான்றிதழ் பெறப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்புதான் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்து விமான நிறுவனம், “ஓரேகானின் போர்ட்லேண்டில் இருந்து கலிபோர்னியாவின் அண்டாரியோவுக்கு சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸின் 1282 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த விமானம் 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் உடனடியாக மீண்டும் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நிகழும். எங்களுடைய குழுவினர் இதுபோன்ற சூழல்களை கையாளவும் பயற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை” என்றும் தெரிவித்துள்ளது.