டிஎன்பிஎஸ்சிக்கு உறுப்பினர்களை லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்த திருத்த விதிகள் செல்லும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் உறுப்பினர்களை லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்த திருத்த விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் முக்கியமான சீர்திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் வரம்புக்குள் கொண்டு வந்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி அப்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்தது தமிழக அரசு. இந்தத் திருத்த விதிகளை எதிர்த்தும், அதை 2011-ம் ஆண்டு முதல் முன்தேதியிட்டு அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் டிஎன்பிஎஸ்சியில் இருந்தவர்களால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் கூறும் போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்பது அரசியலமைப்பு சாசன சட்டத்தின்படி அமைக்கப்பட்டிருக்கிறது. டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களும் அரசியலமைப்பு சாசன சட்டவிதிகளின்படியே நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அவர்கள் பொது ஊழியர்கள் என்ற சட்ட வரையறைக்குள்தான் வருகிறார்கள். இதன் காரணமாக டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்த திருத்த விதிகள் செல்லும். அந்த விதிகள் தன்னிச்சையானது எனக்கூறி ஒதுக்கிவிட முடியாது. இந்த விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கும் அதிகாரம் இருக்கிறது. இந்த விதிகளின் காரணமாக டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உரிமையோ அல்லது டிஎன்பிஎஸ்சியின் தன்னாட்சி அந்தஸ்தோ எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இந்த விதிகளை முன்தேதியிட்டு அமல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் இருந்து டிஎன்பிஎஸ்சி-க்கு மட்டும் தனியாக எந்தவொரு விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினார்கள்.