முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை வரும் ஜன. 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கர் மீது, அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல்கள் விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணை இன்று சனிக்கிழமை நீதிமன்றத்துக்கு வந்தது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சார்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் ஹேமந்த்குமார் ஆஜரானார். விஜயபாஸ்கர் மற்றும் வழக்குரைஞர்கள் ஆஜராகினர். குற்றப்பத்திரிகை குறித்து சுமார் அரை மணி நேரம் இரு தரப்பிலும் விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் ஜன. 11ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி கே. பூர்ண ஜெய ஆனந்த் ஒத்திவைத்தார்.