“ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் தொடங்கி மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன, 90 நரக நாட்கள் கடந்துவிட்டன. காசா தற்போது மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறிவிட்டது. அங்குள்ள மக்கள் அன்றாடம் உயிருக்கு ஆபத்தான சூழலில் வாழ்கின்றனர். ஆனால் இந்த உலகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று ஐ.நா. மனிதாபிமான உதவிகள் குழுவின் தலைவர் மார்டின் க்ரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளி குழுக்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டன. இதில், ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலைகளைக் குறிவைத்து வான்வழியாக கடுமையான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து தரைவழித் தாக்குதலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமானதில் இதுவரை 22000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள். 60 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஐ.நா. மனிதாபிமான உதவிகள் குழு தலைவர் மார்டின் க்ரிஃபித்ஸ் போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. காசா மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாகிவிட்டது. மனிதாபிமான உதவிகளைச் செய்யச் சொல்வோருக்கும் 20 லட்சம் மக்களுக்கு உதவுவது என்பது பெரும் சவாலாக உள்ளது. இதுவரை ஐ.நா உதவிக் குழுவைச் சேர்ந்த 142 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போர் தொடங்கியிருக்கவே கூடாது. இப்போது இதனை முடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். காசா மக்களுக்காக மட்டுமல்ல இனிவரும் சந்ததிகளை மனதில் கொண்டும் போரை நிறுத்த முற்படவேண்டும். இந்த 90 நாட்களும் நரக நாட்களே. நடந்தவை எல்லாமே மனிதாபிமானத்தின் மீதான தாக்குதல்கள் மட்டுமே. அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து சர்வதேச சட்டத்தின் கீழ் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அனைத்து பிணைக் கைதிகளும் நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
யுனிசெப் அமைப்பு கூறுகையில், “இஸ்ரேல் – ஹமாஸ் போரால் காசாவில் 10 லட்சத்துக்கும் மேலான குழந்தைகள் நோய் பாதிக்கப்படும் தருவாயில் உள்ளனர். பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு கொடுங்கனவாகவே நகர்கிறது. தண்ணீர், உணவு இல்லாமல் தவிக்கின்றனர். குழந்தைகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இந்தப் போரில் குழந்தைகள். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கான அத்தியாவசிய உதவிகளாவது கிடைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.