பிரதமர் நரேந்திர மோடியின் திருப்பூர் பயணம் திடீர் ரத்து!

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19ம் தேதி திருப்பூர் வர உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் திருப்பூர் சுற்றுப்பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2ம் தேதி திருச்சிக்கு வந்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். மேலும் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை அவர் திறந்து வைத்தார். அதோடு அங்கு நடந்த விழாவில் தமிழகத்தின் பிற வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 2024ம் ஆண்டு பிறந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தந்த முதல் நிகழ்ச்சியாக அவரது திருச்சி சுற்றுப்பயணம் அமைந்தது. இதையடுத்து மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதமே தமிழகத்துக்கு 2வது முறையாக வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதாவது கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தமிழகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த போட்டிகள் வரும் 19ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா ஜனவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தார். இந்த விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தெரிவித்ததாகஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையே தான் கேலோ இந்தியா போட்டியை சென்னையில் தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி அன்றைய தினம் திருப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதாவது திருப்பூரில் புதிதாக இஎஸ்ஐ மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பாஜகவின் பொங்கல் விழா சிறப்பு பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி என்பது திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜகவினர் அறிவித்துள்ளனர். இன்றைய தினம் திருப்பூர் மாவட்ட பாஜகவினர் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதோடு தற்போது பிரதமர் மோடியின் திருப்பூர் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாற்று தேதியில் இஎஸ்ஐ மருத்துவமனை திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த மாற்று தேதி என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளதா பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.