காவல்துறையினருக்கான தனிப் பிரிவு பாஜகவில் உருவாக்கப்படும்: அண்ணாமலை!

இதுவரை எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில், காவல்துறையினருக்கான தனிப் பிரிவு பாஜகவில் உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

சேலத்தில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பலர் பாஜகவில் இணைந்தனர். ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் சுமார் 100 அதிகாரிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். பாஜகவில் இணைந்த முன்னாள் போலீஸ் அதிகாரிகள்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ‘பாரத் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் சங்கம்’ சார்பில், நூற்றுக்கும் அதிகமான ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் முன்னிலையில், தமிழக பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாஜகவில் இணைவது மிகவும் மகிழ்ச்சியக்கிறது. சமூகத்தின் பாதுகாப்பிற்காக மிக நேர்மையான முறையில் செயல்பட்ட காவல்துறையினர் ஓய்வு பெற்ற பின்னர் பாஜக இணைவது பொதுமக்களிடையே மிகுந்த எழுச்சியை உருவாக்கும். காவல் துறையினருக்கான பிரிவு கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று தொடங்கப்படும். கட்சியில் இணைந்துள்ள முன்னாள் காவல்துறையினர், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு தங்களது பகுதிகளில் கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், காவல் துறையினருக்கு 8 மணிநேர வேலை, வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறை மற்றும் மன அழுத்தம் இல்லா பணி வாய்ப்பு உருவாக்கப்படும்.

நாகை மாவட்டத்தில் நடைபயணத்தின் போது என்னிடம் வந்து ஆர்வமாக பேசிய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணியில் அமர்த்த டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.