நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதுவரை 5 பேரை தாக்கிய சிறுத்தையை பிடிப்பட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக, சிறுத்தை ஒன்று முகாமிட்டு வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வந்தது. கடந்த, 21ம் தேதி, சரிதா என்ற பழங்குடியின பெண் உள்ளிட்ட 3 பெண்களை சிறுத்தை தாக்கியது. அதில் சரிதா உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, 5 இடங்களில் கூண்டுகள் வைத்தும், 30 கேமராக்கள் பொருத்தியும் வனத்துறையினர் சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 4ம் தேதி சேவியர் மட்டம் என்ற இடத்தில் வீட்டின் அருகே விளையாடிய, 4 வயது பெண் குழந்தையை சிறுத்தை தாக்கியதில் காயங்களுடன் குழந்தை தப்பியது. அப்போது, சிறுத்தையை சுட்டு பிடிக்க வலியுறுத்தி, மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க வனத்துறை உத்தரவு பிறப்பித்தது. வனத்துறையினர் சிறுத்தையை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, மேங்கோரேஞ்ச் அங்கன்வாடி மையத்தில் இருந்து, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கிர்வார் என்பவரின், 3 வயது மகளை, அவரின் மனைவி தேயிலை தோட்டம் வழியாக நடக்க வைத்து அழைத்து வந்தார். அப்போது, குழந்தையை சிறுத்தை தாக்கி துாக்கி செல்ல முயன்ற போது, தாய் போராடி மீட்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து, குழந்தையை பந்தலுார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். மனிதர்களை தாக்கி வரும் ,சிறுத்தையை சுட்டு பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுகாவில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் தேடி வந்தனர். இதையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறுத்தை புதருக்குள் பதுங்கி இருந்தது. பின்னர், சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். இதுவரை 5 பேரை தாக்கிய சிறுத்தையை பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமி உட்பட 2 பேரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம் மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த திருமதி. சரிதா பிரசாந்த் என்பவர் கடந்த 29.12.2023ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் (அஞ்சல்), எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி சிவ்சங்கர் என்பவர் கடந்த 06.01.2024 அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விலை மதிப்பில்லாத இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா ரூ. 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.