நாடாளுமன்ற தேர்தல் தமாகாவுக்கு மிக முக்கியமானது என்றும், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகா மாணவர் அணியின் 10-வது மாநில செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் சக்தி வடிவேல், விடியல் சேகர், முனைவர் பாட்ஷா, மாணவர் அணி தலைவர் பி.கே.சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வுகுறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் ஒருவித குழப்பதை ஏற்படுத்துவதுடன், நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் மூலம் மாணவர்களை திமுக அரசு திசை திருப்புவது கண்டிக்கத்தக்கது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை உரிய கணக்கீடு செய்து பள்ளி கல்வித்துறை வழங்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள், சாதி ரீதியான சமூக விரோத செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க நீதி போதனை வகுப்புகள், பள்ளி கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தல்கள், பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் தமாகாவுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் வகையில் களத்தில் வலுவாக பணியாற்ற தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறேன். 2024 நாடாளுமன்ற தேர்தல் தமாகாவுக்கு மிக முக்கியமான தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் தமாகாவின் குரல் நாடாளுமன்ற மக்களவையில் ஒலிக்க வேண்டும் என்ற ரீதியில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
தமாகா சார்பில் ஒவ்வொரு மாவட்டம், நகரம், கிராமங்களிலும் மாணவர் அணியின் பணி மிகவும் முக்கியமானது. அதனடிப்படையில் மண்டல கூட்டங்களுக்கு பிறகு மாணவர் அணியின் செயற்குழு கூட்டம் தற்போது நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் கட்சியின் இயக்க பணிகளை தொடர்ந்து அதிகரித்து மக்களை சந்தித்து வருகிறோம்.
யாருடன் கூட்டணி, எத்தனை, தொகுதியில் நிற்கிறோம், என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தமாகா பலமான கட்சியாக தேர்தல்களத்தில் குதிக்க வேண்டியது அவசியம். அதற்காக களப்பணி செய்ய வேண்டிய நேரம் இது. நாடாளுமன்ற தேர்தலில் தமாகா வெற்றிக் கனியை பறிப்பதற்கு இதுபோன்ற கூட்டங்கள் அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.