மோடி குறித்து அவதூறு கருத்து: மாலத்தீவில் 3 அமைச்சர்கள் நீக்கம்!

இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக கடந்த 2 ஆம் தேதி லட்சத்தீவு சென்று இருந்தார். லட்சத்தீவு சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைந்து இருந்தது. லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். இதுமட்டுமின்றி லட்சத்தீவில் பிரதமர் மோடி ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். அதன்பிறகு மறுநாளில் அந்த போட்டோக்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், ‛‛லட்சத்தீவு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் உள்ள மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என தெரிவித்து இருந்தார்.

பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்த மாலத்தீவு அமைச்சர் ஜாஹித் ரமீஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்த நடவடிக்கை என்பது பெரியது தான். இருப்பினும் எங்களுடன் போட்டியிடுவது என்பது ஒரு மாயை போன்றது. ஏனென்றால் நாங்கள் வழங்கும் சலுகைகளை போல் அவர்கள் எப்படி வழங்க முடியும்? எப்படி சுத்தமாக இருக்க முடியும்? மேலும் அறைகளில் இருந்து வரும் நிரந்தரமாக வரும் துர்நாற்றம் பெரிய பின்னடைவாக இருக்கும்” என்றார்.

மாலத்தீவு அமைச்சரின் இந்த கருத்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மாலத்தீவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து அந்த நாடு சீனாவுக்கு ஆதரவான நாடாக மாறி வருகிறது. இந்த சூழலில் தான் மாலத்தீவு அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் மோடி குறித்து மேலும் 2 மாலத்தீவு அமைச்சர்களும் சர்ச்சையாக பேசியிருந்தனர். மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல புக் செய்த பலர் இந்தியர்களும் தங்களது பயணத்தை ரத்து செய்வதாக சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் மாலத்தீவுக்கு இது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, மல்ஷா, ஹசன் ஜிஹான் ஆகியோரும் சர்ச்சையாக பதிவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், அமைச்சர்களின் கருத்துக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும்.. அமைச்சர்கள் கூறியது அமைச்சர்களின் தனிப்பட்ட கருத்து எனவும் மாலத்தீவு விளக்கம் அளித்து இருந்தது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட 3 அமைச்சர்களையும் சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.