பரந்தூர் விமான நிலையத்தின் 3டி மாதிரி: சீமான் கண்டனம்!

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் மேலெழுந்து வரும் நிலையில், சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத்தின் 3டி மாதிரி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஏற்கெனவே ஒரு விமான நிலையம் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், நகரம் வேகமாக வளர்ந்து வருவதால் இரண்டாவது விமான நிலையத்திற்கான தேவை எழுந்திருக்கிறது. இதனால் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் சுமார் 500 ஏக்கரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டது. இதன்படி, ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் எழுந்தன. ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் 500 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது வேறு வடிவத்தை எட்டியிருக்கிறது. அதாவது ஏகனாபுரம் கிராம மக்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு சூழலியல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

பூவுலகின் நண்பர்கள் எனும் சூழலியல் அமைப்பு இது குறித்து கூறுகையில், “திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள மொத்த நிலத்தில் பாதிக்கு மேல் நீர்நிலைகளாக இருப்பதால் இத்திட்டம் நிச்சயம் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். இது தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முன்பாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்க நிர்வாக அனுமதி வழங்கியது ஏற்புடையது அல்ல. தொடக்கத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்த 4563 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என செய்திகளில் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியான அரசாணை 20 கிராமங்களைச் சேர்ந்த 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் எனவும், அதில் 2682.62 ஏக்கர் WETLANDS(வேளாண் நிலம்+நீர்நிலை) எனக் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு விமான நிலையம் வந்தால் அதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திட்டங்கள், கட்டுமானங்கள், அடிப்படை வசதிகள் எழுப்ப நிலம் பயன்படுத்தப்படும் என்பதால் இத்திட்டம் வேளாண்மை மற்றும் நீர்நிலைகளில் எதிர்பார்த்ததைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்” என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதேபோல நாம் தமிழர் கட்சியும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத்தின் 3டி மாதிரி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, “சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பரந்தூர் வானூர்தி நிலையத்தின் முப்பரிமாண மாதிரியை வைத்த தமிழ்நாடு அரசுக்கு, ஒருவேளை இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னையின் முப்பரிமாண மாதிரி எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டுமென்றால், அதன் நேரலைக் காட்சியினை 2023 ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் இயற்கை காட்டிவிட்டது என்று நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.