5-வது முறையாக வங்கதேச பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா!

வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. முதல்கட்ட முடிவுகளின்படி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

வங்கதேசத்தில் நேற்று அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மொத்தமுள்ள 300 இடங்களில் 200 இடங்களை கைப்பற்றியுள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீத முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை அவாமி லீக் பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஷேக் ஹசீனா எட்டாவது முறையாக கோபால்கஞ்ச்-3 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 1986ல் இருந்து இத்தொகுதியில் போட்டியிட்டு வரும் அவர், இம்முறை 2,49,965 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட போட்டியாளர்களில் முக்கியமானவரான பங்களாதேஷ் சுப்ரீம் கட்சியைச் சேர்ந்த எம் நிஜாம் உதின் லஷ்கர் வெறும் 469 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் பிரதமராக ஐந்தாவது முறையாக பதவி ஏற்க இருக்கிறார். அதேபோல் தொடர்ச்சியாக நான்காவது முறையாக பதவி ஏற்கவுள்ளார்.. இது ஒட்டுமொத்தமாக அவரது கட்சிக்கு 5 வது வெற்றியாகும். வங்கதேச பொதுத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) புறக்கணித்துள்ளது.

ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து தேர்தலை புறக்கணிப்பதாக பிஎன்பி கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியா அறிவித்தார். தேர்தலுக்கு முன்பாக நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன. பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.