பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது ரத்து!

பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குஜராத் அரசின் முடிவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், 11 பேர் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது. அதேநேரம், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் விசாரணைக்கு தகுதியானவை இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது. தீர்ப்பில், “குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், மராட்டிய அரசு தான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2008-ல் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த இவர்களுக்கு, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் கடந்த 2022 ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதற்கு எதிராக மார்க்சிஸ்ட் பிரமுகர் சுபாஷினி அலி உள்ளிட்ட 3 பேர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

சர்ச்சைகள் வலுக்கவே குஜராத் உள்துறை கூடுதல் செயலர் ராஜ் குமார், “11 பேரும் ஏற்கெனவே 14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர். சட்டப்படி ஆயுள் தண்டனை என்பது குறைந்தது 14 ஆண்டுகள் தண்டனை கொண்டதுதான். குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அதன் பின்னர் தண்டனைக் குறைப்பு கோரலாம். ஆனால், அதை வழங்குவது தகுதியின் அடிப்படையில் அரசாங்கத்தால் முடிவு செய்யப்படும். இந்த வழக்கிலும் சிறை ஆலோசனைக் குழு பரிந்துரைகள், மாவட்ட சட்ட வல்லுநர்கள் அறிவுறைகள் கேட்டே இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தனது குடும்பத்தினரை படுகொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட 11 பேரையும் முன்கூட்டியே விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.