5 ஆண்டுகளாக பருவமழை ஜனவரி வரை நீடிக்கிறது: பாலச்சந்திரன்

“கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஜனவரி வரை வடகிழக்குப் பருவமழை இருந்துள்ளது. எனவே, அதனை தொடர்ந்து கண்காணித்து முடிவுறும் காலம் தெரிவிக்கப்படும்” என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மற்றுமொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 5 இடங்களில் அதி கனமழையும், 17 இடங்களில் மிக கனமழையும், 55 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து அதிக அளவில்தான் இருந்து வருகிறது. தொடர்ந்து நான்கைந்து தினங்களுக்கு மழை இருக்கிறது. குறிப்பிடத்தகுந்த மழையளவு இல்லாதபோதுதான் வடகிழக்குப் பருவமழை முடிவுறும் காலம் தெரியவரும். கடந்த 4 ஆண்டுகளாகவே, அதாவது 2018-ம் ஆண்டில் ஜன.2, 2019-ம் ஆண்டில் ஜன.10, 2020-ம் ஆண்டில் ஜன.19, 2021ம் ஆண்டில் ஜன.22, கடந்தாண்டு ஜன.12 வரை வடகிழக்குப் பருவமழை இருந்துள்ளது. இவ்வாறாக கடந்த காலங்களில் ஜனவரி மாதம் வரையில் வடகிழக்குப் பருவமழை நீடித்துள்ளது. எனவே, அதனை தொடர்ந்து கண்காணித்து முடிவுறும் காலம் தெரிவிக்கப்படும்.

அடுத்து வரும் இரு தினங்களில் தென்மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. குமரிக்கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மழைப்பொழிவு இருக்கும். சின்ன இடைவெளி இருக்கும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு அதி கனமழை வாய்ப்பு இல்லை.

ஜனவரி மாதத்தைப் பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவானதுதான் புதுச்சேரியில் அதிகபட்சமழை. நாகப்பட்டினத்தில் இரண்டாவது அதிகபட்ச மழையாகவும், கடலூரில் மூன்றாவது அதிகபட்ச மழையாகவும் பதிவாகி உள்ளது.

நாகையைப் பொறுத்தவரை தற்போது 20.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஜனவரி மாதத்தில் அங்கு பதிவானதில், 24.5 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. கடலூரைப் பொறுத்தவரை, கடந்த 130 ஆண்டுகளில், இந்த ஆண்டு 13.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பாக 19.7 செ.மீ, பின்னர் 15.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக்கான காலக்கட்டம் என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள்தான் இருக்கும். இந்த ஆண்டு 455 மி.மீ வடகிழக்குப் பருவமழை பதிவாகி இருக்கிறது. கடந்தாண்டு 445 மி.மீ பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 4 சதவீதம் அதிகம்.

கடந்த ஆண்டு ஒரு சதவீதம் அதிகம். குளிர்காலங்களான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், இந்த எட்டு தினங்களில் பதிவானது 28.7 மி.மீ. இந்தக் காலக்கட்டத்தின் இயல்பு 5 மி.மீ மட்டும்தான். இயல்பாக குளிர்காலத்தில் அதிக மழை இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.