திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:-

6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த பேச்சுவார்த்தையில், “எதையும் இப்போது ஏற்க இயலாது. பொங்கலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது. முழுக்க முழுக்க நியாயமற்ற பதில் இது. அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாத பதில் இது. ஊழியர்களின் கோரிக்கைகள் எதன் மீதும் இப்போது முடிவு சொல்ல முடியாது என்று அரசு தரப்பும், அமைச்சரும் சொன்னார்கள். அதனை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்.

இந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது. தமிழகத்தில் இருக்கிற எந்த துறையிலும், எந்த பொதுத்துறை தொழிலாளிக்கும் இழைக்கப்படாத அநீதியை போக்குவரத்து தொழிலாளிகளுக்கு இந்த அரசு இழைத்துக்கொண்டே இருக்கிறது. பஞ்ச படியை பொறுத்தவரை எங்களுக்கு அதிகரித்து தர வேண்டும் என்று கேட்கவில்லை, எங்களுக்கு தரவேண்டிய பாக்கியை தான் கேட்கிறோம். எங்களுக்கு அரசு தரவேண்டிய கடன். மற்ற கோரிக்கைகள் எல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம், பஞ்ச படி பாக்கியை மட்டும் கொடுக்க வேண்டும் என்பதேயே இன்றைய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினோம். இதையும் பொங்கலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார்கள்.

எதுவும் செய்ய முடியாது என முடிவெடுத்து மிகப்பெரிய தவறை அரசு இழைக்கிறது. எனவே, வேலைநிறுத்தத்தை திரும்ப பெற முடியாது. திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். எங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆறு கோரிக்கையில் இருந்து ஒரு கோரிக்கைக்கு வந்தபின்னும்கூட அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இன்று மாலை வரை நேரம் இருக்கிறது. அமைச்சர் எங்களை அழைத்து பேச தயாராக இருந்தால் நாங்களும் தயார். வேலைநிறுத்தம் என்ற தவிர்க்க முடியாத சூழலுக்கு எங்களை அரசு தள்ளியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 19-ம் தேதி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. அதற்கடுத்த நாளே அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜன.9-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. பொங்கலுக்குப் பின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், பணிமனைகளில் ஆர்ப்பாட்டம், மக்களை சந்தித்து ஆதரவு கோருதல் என வேலைநிறுத்தத்துக்கான பணிகளை தொழிற்சங்கங்கள் தீவிரப்படுத்தி வந்தன.

இதையடுத்து, வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை முதல்வர் அறிவுறுத்தினார். இதன்படி உடனடியாக தொழிற்சங்கங்களை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். கடந்த 5-ம் தேதி நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் அகவிலைப்படி உயர்வு வழங்குதல் மற்றும் ஊதிய பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இதுதொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், பேச்சுவார்த்தை நேற்றைய தினத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே, உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கியதால் பேச்சுவார்த்தை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்றது.