துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான ஆலோசனைக்குப் பின்னர் 3 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பப் பெற்றார்.

பொதுவாக தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவிக்கு ஒருவரை செய்த தேடுதல் குழு அமைக்கப்படும். பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு பிரதிநிதி, ஆளுநர் தரப்பு பிரதிநிதி ஆகியோரை கொண்டதாக தேடுதல் குழு இருக்கும். இக்குழு தகுதி வாய்ந்தவர்களை துணைவேந்தர் பதவிக்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும். இதனடிப்படையில் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை ஆளுநர் நியமனம் செய்வார். ஆனால் சென்னை பல்கலைக் கழகம், கல்வியியல் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கான துணைவேந்தர்களை தேர்வு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர் நியமனங்களுக்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதி ஒருவரும் இடம் பெறுவார் என அறிவித்திருந்தார்.

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதமும் அனுப்பினார். அக்கடிதத்தில், பல்கலை கழக மானிய குழுவின் விதிகளைத்தான் துணைவேந்தர் நியமனத்தில் பின்பற்ற வேண்டும். அந்த குழுவின் பிரதிநிதி ஒருவர் இடம் பெற வேண்டும் என்பதெல்லாம் கட்டாயம் இல்லை என சுட்டிக்காட்டி இருந்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமது நிலைப்பாட்டை மாற்றவில்லை. 3 பல்கலைக் கழகங்களுக்கும் துணைவேந்தர்களை தேர்வு செய்ய மத்திய பல்கலைக் கழக மானிய குழு (யுஜிசி) பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய தேடுதல் குழுக்களை அறிவித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கும் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது, உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக சட்டவிதிகளில் துணைவேந்தரைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழுவை ஆளுநர் அமைக்க வழிமுறை இல்லை. எந்த ஓர் ஆளுநரும், தன்னிச்சையாகத் தேடுதல் குழுவை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. ஆளுநரால் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தேடுதல் குழு, முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது எனவும் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மோடியுடன் ராகுலை ஒப்பிட முடியாதாம்! கார்த்தி சிதம்பரத்துக்கு பறந்த நோட்டீஸ்

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் இந்த தேடுதல் குழு விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு முதல்வருடன் ஆலோசனை நடத்த ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனடிப்படையில் அண்மையில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பைத் தொடர்து இன்று 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய தாம் நியமித்த தேடுதல் குழுக்களை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ரவி அறிவித்துள்ளார்.