மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறார்: கார்கே

மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கெ கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர், அனைத்து விஷயங்களையும் தனிப்பட்ட முறையிலேயே எடுத்துக்கொள்கிறார். சர்வதேச அளவில் நாம், நமது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். காலத்துக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். அண்டை நாட்டினரை நம்மால் மாற்ற முடியாது” என்று தெரிவித்தார்.

இதனிடையே, “நரேந்திர மோடி நமது நாட்டின் பிரதமர். வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், எந்தப் பதவி வகித்தாலும் அவர்கள் இந்திய பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது. பிரதமர் பதவிக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். நாட்டுக்கு வெளியே இருந்து இந்திய பிரதமர் விமர்சிக்கப்படுவாரானால் நாங்கள் அதனை ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர்சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அத்துடன் “சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்” என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, மாலத்தீவு துணை அமைச்சர்கள் மரியம்ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக, மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை மிகப் பெரிய சுற்றுலா தலமாக மாற்ற பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் என்று குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் குறித்து மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து, “வெளிநாட்டு தலைவர்கள் மீது அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவை அவர்களின் தனிப்பட்ட கருத்து” என மாலத்தீவு அரசு சார்பில் நேற்று முன்தினம் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் 3 மாலத்தீவு அமைச்சர்களின் பதவியும் தற்காலிகமாக பறிக்கப்பட்டது. அதேவேளையில், இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் நேற்று மாலத்தீவு தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.