தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிப்பு!

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்பட 26 பேருக்கு 2023 ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கினார்.

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான்சந்த், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலை அண்மையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டது.

அதில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.தமிழகத்தைச் சேர்ந்த செஸ் ப்ளேயரான வைஷாலிக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.