ஊழல் வழக்கில் தொடர்புடைய நபருக்கு ஆதரவாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பல்கலைக் கழகத்துக்குள் நுழைய முற்படுவாரேயானால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தச் சூழலில் ஜெகநாதனின் பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் ஊழல் குற்றச்சாட்டுகள் என தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வந்தது. தன்னை ஆர்எஸ்எஸ்காரர் என்றும், செய்யும் அத்தனை ஊழல்களையும் மத்திய பாஜக அரசு காப்பாற்றும் என்றும் கருதி செயல்பட்டு கொண்டிருப்பவர் தான் இந்த ஜெகநாதன்.
இந்தச் சூழலில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், PUTER பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றக் கூடிய ஆசிரியர்களை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக புகாரும், ஏற்கெனவே தொழிற்சங்கத்தினர், பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு முறைகேடு புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர். குறிப்பாக சட்டவிரோதமாக பணியாளர்களை நியமிப்பது, தகுதி இல்லாத ஆசிரியர்களை நியமிப்பது, பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு, ஆட்சி மன்ற குழுவின் அனுமதி இல்லாமல் பல்வேறு தனியார் அமைப்புகளுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்த நிலையில், பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு காரணங்களுக்காக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மீது, தமிழக அரசு சார்பில் காவல்துறை மூலம் ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், கூட்டு சதி, மோசடி, போலி ஆவணங்களைத் தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வளவு குற்றச் செயல்களில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு கீழமை நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்து, காவல் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்னும் இரண்டு தினத்தில் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு எனக் கூறிக் கொண்டு, அனைத்து பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நாளை (ஜன.11) நடத்த உள்ளதாக அறிய வருகிறோம்.
பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து கொண்டு, தனக்குச் சொந்தமாக PUTER பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, ஒரு தனியார் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு பல்கலைக்கழக நிதியை, மாணவர்களுக்கான பணத்தை, மக்கள் வரிப் பணத்தை கையாடல் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டவரை காப்பாற்றும் விதமாக செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உள்நோக்கம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளில் தொடர்புடைய ஒரு துணை வேந்தரை பாதுகாக்கும் நோக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு செல்வது, ஊழல்வாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும், அவ்வழக்கை திசை திருப்பவும், சாட்சியங்களை களைப்பதற்கும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை மறைமுகமாய் காப்பாற்ற நினைக்கிறாரா ஆளுநர் என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் கல்வி முறைகளை மேம்படுத்த உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பதில் தேர்வு குழுவில் தன்னிச்சையாக ஒருவரை ஆளுநர் நியமிப்பது தவறு என நீதிமன்றம் கருத்து கூறிய நிலையில், பல்கலைக்கழகத்தில் ஊழல் பெருச்சாளியாய் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒருவரை காப்பாற்றுவதற்காக இத்தனை முயற்சியா? என்ற கேள்வி பொதுமக்கள் எழுப்புகின்றனர்.
தமிழகத்தின் வருங்கால சந்ததியினரான மாணவர்களை மேம்படுத்தும் உன்னதமான பணியினை மேற்கொள்ளும் பல்கலைக்கழகத்தில் ஊழல் செய்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரை காப்பாற்ற வேண்டுமென்ற உள்நோக்கத்தோடும், சாட்சியங்களை களைப்பதற்காகவும், ஆய்வுக்கூட்டம் என்றப் பெயரால் பல்கலைக்கழகத்துக்கு செல்லும் மத்திய பாஜக அரசின் ஏஜெண்டாக இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கிறது. மேலும், உடனடியாக ஆளுநர் பல்கலைக்கழக ஆய்வுப் பணியை ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறது.
அதையும் மீறி, ஊழல் வழக்கில் தொடர்புடைய நபருக்கு ஆதரவாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சேலம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முற்படுவாரேயானால், திமுக மாணவர் அணி, திராவிட மாணவர் கழகம், மதிமுக மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம் (SFI), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), முற்போக்கு மாணவர் கழகம் (RSF), முஸ்லிம் மாணவர் பேரவை (MSF), சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI), மாணவர் இந்தியா, அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவர் அணி, தமிழ்நாடு மாணவர் முன்னணி (TSF) உள்ளிட்ட தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO – TN) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தோழர்கள், முற்போக்கு சிந்தனையுடைய மாணவர், இளைஞர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.