இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழப்புகளை ஏற்க முடியாது: ஐ.நா.வில் இந்தியா!

இஸ்ரேல்-ஹமாஸ் போரி உயிரிழப்புகளை ஏற்க முடியாது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளின் தலைவர்களுடன், இந்தியாவின் தலைமை தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று ஐ.நா.வில் இந்திய நிரந்தர பிரதிநிதி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடந்தது. இதில், மேற்கு ஆசியாவில் காணப்படும் சூழல் பற்றி ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசினார். அப்போது அவர், காசாவில் காணப்படும் சூழ்நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் மற்றும் மனிதநேய உதவிகளை நீட்டிப்பதற்கும் இந்தியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், நடந்து வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரால் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியாகி உள்ளனர். இது மனிதநேய நெருக்கடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தெளிவாக ஏற்று கொள்ள முடியாத ஒன்று. குடிமக்கள் உயிரிழப்புகளுக்கு நாங்கள் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறோம்.

அதேவேளையில், கடந்த அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களால் உடனடியான விளைவுகள் ஏற்பட்டன என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். அதிர்ச்சி தரக்கூடிய, எந்த சந்தேகமும் இன்றி எங்களின் கண்டனத்திற்கு தகுதியானது அந்த விசயம். பயங்கரவாதத்திற்கு பூஜ்ய சகிப்பின்மை அணுகுமுறையை இந்தியா கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளின் தலைவர்களுடன் தொடர்ந்து, இந்தியாவின் தலைமை தொடர்பில் உள்ளது. ஜி20, பிரிக்ஸ் மற்றும் 2023-ம் ஆண்டு நவம்பரில் நடந்த உலகளாவிய தெற்கு உச்சி மாநாடு என பலதரப்பு அமைப்புகளிலும் நாங்கள் குரலெழுப்பி வருகிறோம். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் விவகாரத்தில், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அளவிலான செயல்பாடுகள் வழியே அமைதிக்கான தீர்வை காண்பதே முன்னெடுத்து செல்ல கூடிய ஒரே வழியாகும் என்று அவர் கூறினார்.