ஏக்நாத் ஷிண்டே தரப்பே உண்மையான சிவசேனா கட்சி: சபாநாயகர் அறிவிப்பு!

ஏக்நாத் ஷிண்டே தரப்பே உண்மையான சிவசேனா கட்சி என்று மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்துள்ளார்.

சிவசேனா கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. இதையடுத்து ஒரு பிரிவுக்கு உத்தவ் தாக்கரேவும், மற்றொரு பிரிவுக்கு ஏக்நாத் ஷிண்டேவும் தலைமை தாங்கினர். ஷிண்டே பிரிவு தனியாக பிரிந்ததை அடுத்து, முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக, சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் ஆதரவோடு மகாராஷ்டிரா முதல்வரானார்.

இதையடுத்து, சிவசேனா கட்சிக்கு இரு தரப்பும் உரிமை கோரின. அதோடு, ஒரு தரப்பு, மற்றொரு தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு தாக்கல் செய்தன. இரண்டில் எது உண்மையான சிவ சேனா என்பது குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேகர் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், தனது முடிவை சபாநாயகர் ராகுல் நர்வேகர் இன்று மாலை அறிவித்தார். அவர் கூறியதாவது:-

எந்தப் பிரிவு உண்மையான அரசியல் கட்சி என்பது சட்டமன்ற பெரும்பான்மையில் இருந்து தெரியும். அந்த வகையில், ஷிண்டே பிரிவுக்கே பெரும்பான்மை எம்எல்ஏக்களின் (38 எம்எல்ஏக்கள்) ஆதரவு உள்ளது. அதோடு, 2022-ல் இருந்து அவர்களின் தீர்மானங்களும் இதனை வெளிப்படுத்தி உள்ளன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி யார் உண்மையான அரசியல் கட்சி என்பதை தீர்மானித்துள்ளேன். இதற்கான சிவசேனாவின் அரசியல் அமைப்பு மற்றும் தலைமைக் கட்டமைப்பு குறித்து பரிசீலித்தேன். 1999-ல் இயற்றப்பட்ட சிவசேனாவின் அரசியலமைப்பின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளேன். சிவசேனாவின் கட்சி விதிகள் தொடர்பாக ஒருமித்த முடிவு எதுவும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்படவில்லை. தலைமைக் கட்டமைப்பு விவகாரத்தில் இரண்டு பிரிவுகளும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளன.

இந்நிலையில், யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதே முக்கிய அளவுகோளாக உள்ளது. எனவே, பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு பெற்ற ஏக்நாத் ஷிண்டே பிரிவே உண்மையான சிவசேனா. எனவே, ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்குக் கிடையாது. அதேபோல், சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரமும் அவருக்குக் கிடையாது என தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் இந்த அறிவிப்பை அடுத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு நீடிக்குமா என்ற சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. எனினும், சபாநாயகரின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.