மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் ஜன.19-ல் நடைபெறும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து, வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், நாளை உடனடியாக பணிக்குத் திரும்புவதாகவும், தொழிற்சங்கங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதல்வருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஜன.19 ஆம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன்பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும். கருணை அடிப்படையில் 800-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்துக் கழகங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் மற்றொரு கோரிக்கையான புதியதாக ஓட்டுநர், நடத்துநர்களை பணிக்கு எடுக்க வேண்டும் என்பதும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைமையை பொருத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.