தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ‛‛ஆமா.. ஆமா..” என முதலில் கூறிய உதயநிதி ஸ்டாலின் கடைசியில் ட்விஸ்ட் வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் முதலில் இடம்பெறவில்லை. அதன்பிறகு கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் சிறப்பு திட்ட அமலாக்க துறையையும் அவர் கவனித்து வருகிறார். இந்த துறையை முதல்வர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் மகன் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த துறை தான் மாநில அரசின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் துறையாகும். இந்த முக்கியமான துறை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட நிலையில் அவர் விரைவில் துணை முதல்வராக நியமனம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் கடந்த ஓராண்டுகளாக வலம் வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது அதற்கான காலம் நெருங்கிவிட்டதாக திமுகவினர் தெரிவித்து வருகின்றனர். அதாவது ஜனவரி 21ம் தேதி சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 28ம்தேதி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் அதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக முதல்வராக இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது தனது பொறுப்பை மூத்த அமைச்சரை கவனிக்க கூறுவார். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கி தனது பொறுப்பை கவனிக்க வைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் என்ற அறிவிப்பு என்பது ஜனவரி 21ம் தேதி சேலத்தில் நடக்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சென்னையில் இன்று உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அப்போது உதயநிதி ஸ்டாலினிடம் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛சார்.. நீங்க துணை முதல்வராக போறீங்க என்ற அறிவிப்பு வெளியாக இருக்கிறதா தகவல் வருகிறதே” என கேள்வி எழுப்பினார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், ‛‛ஆமா.. ஆமா..” எனக்கூறியதோடு ‛‛எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருக்கப்போறாம் ” என ட்விஸ்ட் வைத்து சென்றார். துணை முதல்வர் பதவி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்படி பதிலளித்து இருந்தாலும் கூட விரைவில் அவர் அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட உள்ளதாக விபரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.