சபரிமலையில் கூட்டநெரிசலால் தமிழார்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதி உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
ஏற்கெனவே தலைமை செயலாளர் அவர்கள் கேரள தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். நம்முடைய முதலமைச்சர் அவர்களும் கேரள அரசிடம் தமிழ்நாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும், பாதுகாப்பு வசதிகளையும் செய்ய வலியுறுத்தி உள்ளார். துறை சார்ந்த அமைச்சர் என்ற வகையில், முதலமைச்சர் அவர்கள் என்னையும், கேரளாவின் தேவசம்போர்டு அமைச்சரிடம் பேச சொன்னார். அதே போல் பேசி உள்ளோம். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கேரள அரசும், கேரள காவல்துறையும், தேவசம்போடும் பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
பெரும் அளவு பக்தர்கள் எண்ணிக்கை கூடும் இந்த காலத்திலும் அசம்பாவிதம் ஏதுமின்றி திறமையாக சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். 45 ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்பவன் என்ற முறையில் சொல்கிறேன். ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 3500 பேர்தான் தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளது. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தரிசனம் நடக்கிறது. ஒரு நாளைக்கு 58 ஆயிரம் பேர் அளவுக்கு தரிசனம் செய்ய முடியும். ஆனால் எண்ணிக்கை கூடும்போது கூட்டநெரிசல் அதிகம் ஏற்பட்டு தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
மாலையில் தரிசனத்திற்கு செல்பவர்கள் காலையில் நெய் அபிஷேகத்திற்காக இரவு தங்கும் சூழல் உள்ளது. இருந்தாலும் திறமையாக கேரள அரசு கூட்ட நெரிசலை கையாண்டு வருகிறது. அதிக அளவு பக்தர்கள் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கேரள தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஆகவே தேவையான முன்னேற்பாடுகளை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.