கோயம்பேடு பேருந்து நிலைய இடம் குறித்து சர்ச்சை கிளப்பாதீர்: சேகர்பாபு

கோயம்பேடு பேருந்து நிலைய இடம் குறித்து சர்ச்சைகளைக் கிளப்ப வேண்டாம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இது குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விரைவில் அங்கிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைப்பதற்கும், பேருந்து முனையத்திற்கு ஆகாய நடை மேம்பாலம் அமைப்பதற்கும், தேசிய நெடுஞ்சாலையில் பாதசாரிகளுக்காக நடைமேம்பாலமும் அமைப்பதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லுகின்ற பேருந்துகள் இன்னும் ஒரு வருட காலத்திற்கு இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இறுதி முடிவினை எடுக்கும். ஆகவே, தற்போது இதில் தேவையற்ற சர்ச்சையை கிளப்ப வேண்டாம்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தில் ஒப்பந்தம் எடுத்தவர்கள் படிப்படியாக கடைகளை அமைத்து வருகிறார்கள். தற்போது அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு ஆவின் பாலகங்கள் முழுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள், மருத்துவமனை ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படுகின்ற போது அனைத்து கடைகளும் செயல்பாட்டிற்கு வரும். மக்கள் தேவைக்கேற்ப அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுப்பதற்குண்டான முயற்சிகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் அதற்கு இறங்கி இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.