தேசப் பாதுகாப்பினைக் கூட தேர்தல் நோக்கிலேயே பாஜக அணுகுகிறது: ஜெய்ராம் ரமேஷ்!

நாட்டின் பாதுகாப்பினைக் கூட பாஜக தேர்தல் கண்ணோட்டத்திலேயே அணுகுகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அதில் அவர் கடந்த 6 மாதங்களாக ரஜௌரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் நிலவி வரும் பயங்கரவாதச் செயல்கள் கவலையளிப்பதாக தெரிவித்திருந்தார். ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் கருத்துகள் தேசப் பாதுகாப்பு குறித்து சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட நினைவூட்டல் ஆகும். ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து நீக்கப்பட்ட 2019 ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு பிறகு இன்று வரை 160-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். பணமதிப்பிழப்பு, ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை நீக்கியது போன்ற நடவடிக்கைகளால் பயங்கரவாதம் தடுக்கப்பட்டதாக பாஜக கூறிவருவது முற்றிலும் பொய் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது.

இந்தியாவின் தேச நலன்களைப் பாதுகாப்பதற்கு கடற்கரைகளுக்கு செல்வதும், சமூக ஊடகப் பிரச்சாரங்களும் மட்டுமே போதுமானது என்று பிரதமர் மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார். தேசப் பாதுகாப்பினைக் கூட பாஜக தேர்தல் நோக்கிலேயே அணுகுகிறது. அக்னிபாத் திட்டம் குறித்த அறிவிப்பு ராணுவ அதிகாரிகளுக்கே அதிர்ச்சியளித்ததாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே தனது புத்தகத்தில் கூறியுள்ளார். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.