சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை ஏற்று, வரும் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் விதிகளை மீறி அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER) என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன் பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்படச் செய்ததாக பல்கலைகழகத்தின் ஊழியர் சங்கத்தினர் (PUEU) காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். அதேபோல சாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “தீவிரமான இந்த வழக்கில் தனிநபர் சுதந்திரமும் சம்பந்தப்பட்டுள்ளதால் துணைவேந்தர் தரப்பு வாதங்களையோ, பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களையோ கேட்காமல் இந்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது” எனக் கூறி ஜனவரி 12-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி துணைவேந்தர் தரப்புக்கு உத்தரவிட்டது. மேலும், ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 12-ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், காவல் துறை தரப்பில் நீதிபதி நிர்மல்குமார் முன் முறையீடு செய்யப்பட்டது. சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால், ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என காவல் துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவை ஜனவரி 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.