அங்கித் திவாரியை விசாரணைக்கு எடுக்க கோரிய மனு தள்ளுபடி!

லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை விசாரணைக்கு எடுக்க கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது திண்டுக்கல் நீதிமன்றம்.

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், சுரேஷ் பாபுவிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அமலாக்கத் துறையின் மதுரை அலுவலகத்திற்குள் சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையினர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அங்கித் திவாரி மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து கண்டறிய முடியும்” எனத் தெரிவித்தார். மேலும், அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அவரைப் பாதுகாக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் முயல்கின்றனர். அங்கித் திவாரி கைது செய்யப்படும் வரை அவர் மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை பாதுகாக்க முயற்சிக்கின்றனர் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அங்கித் திவாரியின் ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டது. அங்கித் திவாரிக்கு வரும் ஜனவரி 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர் விசாரணை நடத்தி அங்கித் திவாரிக்கு எதிராக குற்ற பத்திரிக்கை தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் அங்கித் திவாரி மீது டெல்லி அமலாக்கத்துறை ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் துறை ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதி கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மோகனா, வழக்கை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.