பொன்முடி, அவரது மனைவி கீழமை நீதிமன்றத்தில் சரணடைய விலக்கு: உச்ச நீதிமன்றம்!

சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் கீழமை நீதிமன்றத்தில் சரணடைய விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த க.பொன்முடி, கடந்த 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த டிசம்பர் மாதம், பொன்முடி மற்றும் அவரது மனைவியை குற்றவாளிகள் என அறிவித்து இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டிருந்தார். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்தும், கீழமை நீதிமன்றத்தில் சரண் அடைய விலக்கு கோரியும் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு அனுமதிப்பது தொடர்பான விசாரணை, நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா முன்பாக நேற்று நடந்தது. அப்போது பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, பொன்முடி தரப்பின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்று, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைய விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார். தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மேல்முறையீட்டு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.