செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் 3-வது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்த நிலையில், 3-வது முறையாக மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி எஸ்.அல்லி முன்பு இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமாசுந்தரம், அமலாக்கத் துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதிட்டனர். ஏற்கெனவே கூறிய காரணத்தைதான் மீண்டும் கூறியுள்ளனர் என்று தெரிவித்த நீதிபதி, ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார். வரும் 22-ல் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.