பொங்கல் பண்டிகை ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வினை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் டெல்லி வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பொங்கல் பண்டிகை ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வினை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகிறார். இந்தாண்டு விழாவில் கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைச்சரின் வீடு கரும்பு, மஞ்சள், வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் கலந்து கொண்டு, பானையில் பொங்கல் வைத்தார். இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகள். தமிழகத்தின் அனைத்து வீடுகளிலும் பண்டிகையின் கொண்டாட்டங்கள் தெரியத் தொடங்கியுள்ளது. நேற்று லோஹ்ரி கொண்டாட்டங்கள், இன்று மகர உத்தராயணத்தின் பண்டிகை நிகழ்வு, நாளை கொண்டாடப்படும் மகர சங்கராந்தி, மிக விரைவில் மக் பிஹு தொடங்குகிறது. இந்தப் பண்டிகை காலங்களில் அனைத்து குடிமக்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மனநிறைவு ஆகியவை தொடர எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பார்த்த முகங்களை இன்றும் காண்பது சந்தோஷமாக இருக்கிறது. இது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து பண்டிகையைக் கொண்டாடும் உணர்வினைத் தருகிறது. என்னை இந்த விழாவுக்கு அழைத்த அமைச்சர் முருகனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

தனது பேச்சில் திருக்குறள் ஒன்றைச் சுட்டிக்காட்டி பேசிய பிரதமர், “தேசத்தைக் கட்டி எழுப்புவதில் படித்தவர்கள், நேர்மையான தொழிலதிபர்கள், நல்ல விளைச்சல் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். பொங்கல் பண்டிகையின் போது புதிய விளைச்சல் கடவுளுக்கு படைக்கப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் விழாக்கள் விவசாயிகளுடனும், விளைச்சல்களுடனும் தொடர்புடையதாக இருக்கின்றன” என்றார். கடந்த முறை சிறுதானியங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையில் உள்ள உறவினை பற்றி பேசியதை நினைவு கூர்ந்த மோடி, “மிகச் சிறந்த உணவான ‘ஸ்ரீ அன்னா’(சிறுதானியங்கள்) குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும், பல இளைஞர்கள் ஸ்ரீ அன்னா மூலமாக பல ஸ்டார்ட் அப் நிறுவன முயற்சிகளை மேற்கொள்வதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுதானியங்களுக்கான ஊக்குவிப்பால் சிறுதானிய விவசாயத்தில் ஈடுபட்டுவரும் 3 கோடி விவசாயிகள் நேரடியாக பலனடைந்து வருகின்றனர்” என்றார்.

தமிழக வீடுகளின் வாசலில் பெண்கள் கோலமிடுவது குறித்து விரிவாக பிரதமர் பேசினார். வீட்டின் வாசலில் பெண்கள் பல்வேறு புள்ளிகள் வைத்து அதனை ஒன்றாக இணைத்து கோலத்தை உருவாக்குகின்றனர். அந்த ஒவ்வொரு புள்ளிகளும் தனித்தனி முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் அவைகளை ஒன்றாக இணைத்து அவைகளில் வண்ணமிடும் போது கோலம் அதன் உண்மையான அர்தத்தைப் பெறுகின்றது. இந்தக் கோலம் போலத்தான் இந்தியாவும், வெவ்வேறு உணர்வுகளுடன் இருக்கும் நாட்டின் பல்வேறு மூலைகளையும் ஒன்றாக இணைக்கும் போது தேசத்தின் வலிமை புதிய வடிவம் பெறுகிறது.

பொங்கல் பண்டிகை ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வினை பிரதிபலிக்கிறது. காசி தமிழ்சங்கம் மற்றும் சவுராஷ்டிரா தமிழ் சங்கத்தின் மூலம் தொடங்கப்பட்ட பாரம்பரியத்திலும் இதே உணர்வினைக் காணலாம். இந்த உணர்வு வரும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு மிகப்பெரிய உந்து சக்தியாகும். செங்கோட்டையில் இருந்து நான் அழைப்பு விடுத்த 5 உறுதிமொழி ஏற்பின் முக்கிய நோக்கமே நாட்டை ஒற்றுமையுடன் வலுப்படுத்துவதேயாகும். இந்தப் பொங்கல் விழாவில் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த நம்மை அர்ப்பணிப்போம் என்று மீண்டும் நாம் உறுதியேற்போம்” என்று பேசினார்.