ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஷர்மிளா நியமனம்!

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகளான ஒய்.எஸ். ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சி மேலிடம் நியமனம் செய்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதன்பின்பு, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் ரோசய்யாவை முதல்வராக்கியது. இதனால், கோபம் கொண்ட ஜெகன், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அதன்பின் ஆந்திரா இரண்டாக பிரிந்து தெலங்கானா உதயமானது.
இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் சிறை சென்றதும், அவருக்கு பதிலாக அவரது தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா, அரசியலில் குதித்து ஜெகன் பாதியில் கைவிட்ட பாதயாத்திரையை ஆந்திராவில் தொடங்கி மக்களிடம் வரவேற்பு பெற்றார். அதன்பின் ஜாமினில் வெளியே வந்த ஜெகன் 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திர முதல்வரானார்.

இதனிடையே ஜெகன் மற்றும் ஷர்மிளா இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், ஷர்மிளா தனது தாயார் விஜயலட்சுமியுடன் ஹைதராபாத்தில் குடியேறினார். அப்போது அவர் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை தொடங்கினார். எனினும், சமீபத்தில் நடந்த தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், ஷர்மிளா கட்சி, போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஷர்மிளா தனது ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை கலைத்து விட்டு, அதன் நிர்வாகிகளுடன் காங்கிரஸில் இணைந்தார். இதனை தொடர்ந்து, ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க, ஷர்மிளாவை ஆந்திர மாநிலத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சி மேலிடம் நேற்று நியமித்தது. இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுசெயலாளர் கேசி. வேணுகோபால் வெளியிட்டார்.

இது குறித்து ஒய்.எஸ். ஷர்மிளா கூறுகையில், ‘‘என்னை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நியமனம் செய்திருப்பதால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக நான் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.