புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் எப்படி இதில் தலையிட முடியும்?’ என, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன் தொடர்ந்த வழக்கில் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், ஆவணங்களை ஆய்வு செய்வதாகக் கூறி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்றஅமைப்பை அனுமதி பெறாமல் தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்தநிறுவனத்தை செயல்படச் செய்ததாக பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்திருந்தனர்.
அதேபோல் சாதிப் பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து துணைவேந்தர் ஜெகன்நாதன் கைதான நிலையில், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதனிடையே, உயர் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெகன்நாதன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றேன். அப்போது நிர்வாகம் மற்றும் நிதியை கையாளுவதில் முறைகேடுகள் இருந்தன. அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுத்தேன். தொலைதூரக் கல்வி பிரிவில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநீக்கம் மற்றும் பணிநீக்கம் செய்ததால் எழுந்த கடும் எதிர்ப்பையும், உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலையும் மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அரசின் அனுமதி இல்லாமல் அமைப்பை தொடங்கவில்லை. அரசு துறைகளிடம் உரிய அனுமதியை பெற்றிருக்கிறேன். எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் கீழ் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது துணைவேந்தர் ஜெகன்நாதன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், “ஓய்வு பெற்றபின் லாபமடையும் நோக்கில் இந்த நிறுவனம் துவங்கப்பட்டதாக ஊகத்தின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 2013-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி, லாப நோக்கில்லாமல், மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனத்தை துவங்கவும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவும் அரசும் அனுமதியளித்துள்ளது. பல்கலைக்கழகத்துக்கும், மாணவர்களுக்கும் மட்டும் பயன் தரக்கூடிய இதுபோன்ற நிறுவனம், பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் லாப நோக்கு இல்லாத நிறுவனம் என்பதால் ஊழல் எங்கு நடைபெற்றது?” என்று வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இதுவரை நடத்திய விசாரணையில் என்ன தெரிய வந்தது?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், “தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களில் 2013-ல் இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்த, தலா 14.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2023-ல் அரசு மற்றும் சிண்டிகேட்டிடம் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயரில், பல்கலைக்கழக முகவரியில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. அத்துடன், பல்கலைக்கழகத்தின் 2024 சதுர அடி நிலத்தை எந்த அனுமதியுமில்லாமல் பயன்படுத்தியுள்ளனர். அரசு அனுமதியின்றி ஐடிடிசி என்ற பெயரை PUTER என பெயர் மாற்றம் செய்து, 4 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தங்களில் பணம் பரிமாறப்பட்டதா என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது” என்று விளக்கமளித்தார்.
அப்போது, “புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி இதில் தலையிட முடியும்? பணப் பரிமாற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டாமா?” என ஜெகநாதன் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்புனார். அதற்கு பதிலளித்த ஜெகநாதன் தரப்பு வழக்கறிஞர், “2013-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அந்த நிறுவனம் செயல்பட துவங்கவில்லை. 2023-ல் பெயர் மாற்றம், நிலம் ஒதுக்கீடு தொடர்பாகவும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய பல்கலை சிண்டிகேட்டில் அனுமதி கோரப்பட்டது. அனைத்தும் பொது வெளியில் உள்ளது. ஒரு ரூபாய் கூட பரிமாற்றம் செய்யவில்லை. உயர் கல்வித் துறை சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் காவல் துறை தலையிட முடியாது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “வழக்கில் ஜெகன்நாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், “ஜெகன்நாதன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க கோரியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதை எதிர்த்த வழக்கு நாளை (ஜன.19) விசாரணைக்கு வருகிறது. அனைத்து ஒப்பந்தங்களும் கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டார். இதையடுத்து, ஆவணங்களை ஆய்வு செய்வதாக கூறிய நீதிபதி, விசாரணையை நாளை வெள்ளிக்கிழமைக்கு (ஜன.19) தள்ளிவைத்தார்.