சனாதன வழக்கு: உதயநிதி ஸ்டாலின் பிப்.13-ல் ஆஜராக பீகார் கோர்ட் சம்மன்!

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்ற பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 13-ந் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது பீகார் நீதிமன்றம்.

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் மாநாடு ஒன்றை நடத்தியது. அம்மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சனாதன ஒழிப்பு மாநாடு என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற இந்த மாநாட்டில் வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பைத் தந்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு தான் வைக்கப்பட்டுள்ளது என விரிவாக பேசியிருந்தார்.

ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை பாஜகவினர் திரித்து பரப்பினர். அதாவது சனதான தர்மத்தை பின்பற்றுகிறவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி பேசினார் என சமூக வலைதளங்களில் பாஜக பரப்பிவிட்டது. பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் அனைவரும் இந்த பிரச்சனையை கையில் எடுத்தனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையைக் கூட்டி உதயநிதி பேச்சுக்கு பதில் தர உத்தரவிட்டார். மேலும் உதயநிதிக்கு இந்து சாமியார்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். உதயநிதி தலையை வெட்டினால் பரிசுத் தொகை எனவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நாட்டில் பல நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனாலும் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்பதில் உறுதியாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி வருகிறார்.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரிகா வஹாலியா, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப். 13-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.