மணிப்பூரில் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் பலி!

மணிப்பூர் மாநிலம் மோரே நகரில் நேற்று (புதன்கிழமை) குகி இனத்தவருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக அங்கே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கமாண்டோ படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

முரே அருகே உள்ள பாதுகாப்புப் படையினரின் சாவடி மீது குகி பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் காயம் அடைந்திருந்த கமாண்டோ வீரர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் சோமோர்ஜித் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் மற்றொரு கமாண்டோ வீரரும் காயமடைந்துள்ளார். கலவரக்காரர்கள் வார்டு 7 அருகே நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூடு சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. முரேவில் போலீஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இருவரை போலீஸார் கைது செய்த நிலையில் இந்த மோதல் நடத்துள்ளது.

இதனிடையே பொது அமைதிக்கு குந்தகம், மனித உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.