மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை ஜன. 24-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.
புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் – வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள். பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை வரும் ஜன. 24 ஆம் தேதி திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருகிறேன்.
தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்! இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.