தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் மனுதாக்கல் செய்த நிலையில், அதுதொடர்பான தீர்ப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் சட்ட அமைச்சராகவும் பதவி வகித்தவர் சி.வி.சண்முகம். அதிரடி கருத்துக்களுக்கு சொந்தக்காரரான சி.வி.சண்முகம் கடந்த காலங்களில் திமுக மற்றும் பாஜக தலைவர்கள் மீது வைத்த கடுமையான விமர்சனங்கள் சர்ச்சையைக் கிளப்பின. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சி.வி.சண்முகம் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் 12 மணி நேர வேலை நேரம் தொடர்பான அரசின் சட்டத் திருத்தம், மதுபான விற்பனை, வெளி மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்துப் பேசி இருந்தார்.
இதுதொடர்பாக முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் நான்கு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “சி.வி.சண்முகம் முதல்வரை நேரடியாக தாக்கிப் பேசவில்லை. தமிழக அரசை மட்டுமே அவர் விமர்சித்தார். அதிமுகவின் போராட்டத்திற்கு பிறகுதான் 12 மணி நேர வேலை என்ற அரசாணையை அரசு திரும்பப் பெற்றது. இதனால் சி.வி.சண்முகம் கருத்தை அவதூறு கருத்து என எப்படி எடுத்துக்கொள்ள முடியும்” என கேள்வி எழுப்பினார். அவதூறு வழக்கு தாக்கல் செய்யும்போது அதுபற்றி ஆராயாமல் இயந்திரத்தனமாக வழக்கு தொடருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அரசை விமர்சித்துப் பேசிய அதே வேளையில் முதல்வரின் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துப் பேசியதாகவும் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது என கேள்வியை முன்வைத்தார்.
அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தமிழக அரசை கஞ்சா அரசு, டாஸ்மாக் அரசு என பல்வேறு விதங்களில் சி.வி.சண்முகத்தை விமர்சித்துப் பேசியுள்ளார். அரசின் மீதும் முதல்வரின் மீது நேரடியாக தாக்கி பேசப்பட்டுள்ள நிலையில் அதனை அவதூறு இல்லை என எப்படி சொல்ல முடியும்” என்று கேள்வி எழுப்பினார். சி.வி.சண்முகம் மற்றும் தமிழக அரசு என இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தள்ளிவைத்தார்.