மியான்மர் எல்லையில் இருந்து திடீரென பல நூறு ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் உள்ள அசாம் மாநிலத்தில் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடு மியான்மர். வெறும் 5.38 கோடி மக்களை மட்டுமே மியான்மர் சீனா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தியா என பல முக்கிய நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதற்கிடையே அந்த மியான்மர் நாட்டில் இருந்து திடீரென ராணுவத்தினர் இந்திய எல்லையில் இருக்கும் அசாம் மாநிலத்தில் நுழைந்த சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.
மியான்மரில் கிளர்ச்சிப் படைகளுக்கும் ராணுவ ஆட்சிக்கும் இடையே சண்டை மூண்டதால், பல நூறு மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். மிசோரம் அரசு இது குறித்து உடனடியாக மத்திய அரசை அலர்ட் செய்துள்ளது. அண்டை நாட்டு வீரர்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவதை உறுதி செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மியான்மரில் நடந்து வரும் மோதலால் சுமார் 600 வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். மேற்கு மியான்மரில் உள்ள ரக்கைனில் உள்ள அரக்கான் போராளிகள் ராணுவத்தின் முகாம்களைக் கைப்பற்றிய நிலையில், அவர்கள் மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தியாவில் தஞ்சம் புகுந்த அந்த மியான்மர் வீரர்கள் இப்போது அசாம் ரைபிள்ஸ் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மிசோரம் முதல்வர் லால்துஹோமா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அவசர ஆலோசனையையும் நடத்தினர். மிசோரத்தில் தஞ்சமடைந்த மியான்மர் ராணுவ வீரர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டியதன் அவசியத்தையும் மிசோரம் அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் குழப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த கோரிக்கை வந்துள்ளது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மிசோரம் முதல்வர் லால்துஹோமா, தற்போது அங்கு நிலவும் நிலைமையை விளக்கினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “மியான்மரில் இருந்து பலர் இந்தியாவுக்குள் தஞ்சமடைய வருகிறார்கள். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் உதவுகிறோம். ஆனால் மியான்மர் வீரர்கள் தங்குமிடம் தேடி வந்துகொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே இதுபோல வந்தவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்பினோம். இதுவரை சுமார் 450 ராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்” என்று தெரிவித்தார்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கே சில காலமாக மோதல் போக்கு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் பிற்பகுதியில் மூன்று சிறுபான்மைப் படைகள் ஒருங்கிணைந்த தாக்குதலை ஆரம்பித்தனர். இதில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சில நகரங்கள் புரட்சிப் படைகள் வசம் சென்றன. 2021ஆம் ஆண்டில் அங்கே இருந்த மக்கள் ஆட்சியைச் சதி மூலம் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும், அப்போது முதலே தொடர்ச்சியாக அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.