நிலவில் தரையிறங்கிய ஜப்பான் ‛ஸ்லிம்’ லேண்டர் விண்கலம்!

ஜப்பான் நாட்டின் ‛ஸ்லிம்’ லேண்டர் நிலவின் மேற்பரப்பில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறங்கிய 5வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றது.

நிலவை ஆய்வு செய்ய பல நாடுகள் போட்டிப்போட்டு வருகின்றன. பூமியில் மட்டுமே மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் நிலவில் தண்ணீர் இருக்கிறதா? என்பது பற்றிய ஆய்வுகளை உலக நாடுகள் தொடங்கி உள்ளன. இந்தியா சார்பில் சந்திரயான் திட்டம் மூலம் நிலவு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்திரயான் – 1, சந்திரயான் -2, சந்திரயான் -3 திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி உள்ளது. இதில் சந்திரயான் -1 திட்டம் 100 சதவீதம் வரை வெற்றி பெற்றது. சந்திரயான்-2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கியபோது விழுந்து நொறுங்கியது. இருப்பினும் மனம் தளராத இஸ்ரோ சந்திரயான் -3 திட்டம் மூலம் நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்’ முறையில் கடந்த ஆண்டு தரையிறங்கி சாதித்து காட்டியது. சந்திரயான் -2 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு தனது பணியை சிறப்பாக செய்து முடித்தது. இஸ்ரோ செய்த இந்த சாதனை மூலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்ததாக 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இதன் தொடர்ச்சியாக தான் ஜப்பான் ‛ஸ்லிம்’ எனும் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க திட்டமிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி ‛ஸ்லிம்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஜப்பான். தனேகஷிமா விண்வெளி மையத்தில் எச்ஐஐ-ஏ லாஞ்சர் மூலம் ‛ஸ்லிம்’ லேண்டர் ஏவப்பட்டது. இந்நிலையில் 4 மாத பயணத்துக்கு பிறகு ஸ்லிம் லேண்டர் நேற்று நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவுக்கு அடுத்ததாக நிலவில் தரையிறங்கிய 5வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றது. இதனை ஜப்பான் விஞ்ஞானிகள் கொண்டாடினர். ஆனால் அடுத்த சிறிது நேரத்தில் ஜப்பானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது நிலவில் தரையிறங்கிய ‛ஸ்லிம் லேண்டர்’ என்பது சூரியஒளி மூலம் தனது இயக்கத்துக்கான ஆற்றலை தயாரித்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிலவில் தரையிறங்கிய உடன் ஸ்லிம் லேண்டர் லேண்டர் விரைவாக தனது சக்தியை இழக்க தொடங்கியது. மேலும் சூரியஒளியில் இருந்து ஆற்றல் தயாரிக்கும் பேட்டரிகள் செயலிழந்ததாக கூறப்படுகிறது.

அதாவது நிலவின் மேற்பரப்பில் சூரியஒளியை உள்வாங்கி லேண்டரின் பேட்டரிகள் செயல்பட வேண்டும். ஆனால் லேண்டர் பேட்டரிகள் செயல்படவில்லை. இதனால் லேண்டருக்கு தேவையான மின்சாரத்தை சூரியஒளி பேட்டரிகள் உற்பத்தி செய்யாமல் உள்ளன. இதுதான் ஜப்பான் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து ஜப்பானின் இந்த திட்டம் என்பது குறைந்தபட்ச வெற்றியை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது லேண்டரின் சூரியஒளி பேட்டரிகள் சரியாக செயல்படாததால் இந்த லேண்டரின் ஆய்வு பணிகள் முன்கூட்டியே முடிவடைய வாய்ப்புள்ளது.