ஆர்.நட்ராஜ் தொடர்ந்த வழக்கிலிருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விலகல்!

தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏவான முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் தொடர்ந்திருந்த வழக்கில் இருந்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விலகியுள்ளார்.

ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்த கோயில்களை இடித்தது தொடர்பாக தமிழக அரசு மற்றும் முதல்வரை விமர்சித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், முன்னாள் டிஜிபியுமான ஆர்.நட்ராஜ் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஷீலா என்பவர் திருச்சி மாவட்ட எஸ்பியிடம் அளித்த புகாரின்பேரில், நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நட்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரான நட்ராஜ் தரப்பில் தன்னைப்பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி தகாத வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இதுதொடர்பாக திருச்சி போலீஸார் விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான ஆர்.நட்ராஜ் தனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் என்பதாலும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி அறிவித்துள்ளார். அதையடுத்து இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பாக பட்டியலிட பதிவுத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.