ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைத்தது. அக்குழுவின் செயலர் நிதின் சந்திராவுக்கு கடிதம் ஆம் ஆத்மி கட்சியின் செயலாளர் பங்கஜ் குப்தா அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே சிதைத்துவிடும். அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சியையும் பாதிப்புக்கு உள்ளாக்கும்.
தொங்கு சட்டப்பேரவை ஏற்படும்பட்சத்தில் இத்திட்டத்தால் அதனை சரிசெய்ய முடியாது. அந்த சமயத்தில் வெளிப்படையாக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் அவலம் நேரும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் மொத்த பட்ஜெட்டில் 0.1 சதவீதம் மட்டுமே மிச்சமாகும். இத்திட்டம் மத்தியில் ஆளும்கட்சிக்கு மட்டுமே சாதகமாக முடியும். மாநிலக் கட்சிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். மேலும் விளிம்புநிலை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் உள்ள இந்தியாவின் பலகட்சி முறையில் இத்திட்டம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆம் ஆத்மி கட்சி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.