அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கோரிய ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை வானகரத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவும் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், தான் பங்கு பெறாத பொதுக்குழு கூட்டத்தில் தம்மை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்து, இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. விசாரணையின் போது ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதில், கட்சி விதிகளின்படி ஓபிஎஸ் நீக்கம் செய்யப்படவில்லை என்று வாதங்களை வைத்தார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிய தீர்மானம் என்பது பொதுக்குழு விதிகளுக்கு முரணானது. எனவே பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். மேலும், ஏற்கனவே விசாரணை நீதிமன்றத்தில் இந்த சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது தலையிட்டால் அது மேலும் சிக்கலாகி விடும். எனவே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தற்போது தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழு தொடர்பான மூல வழக்கை தொடர்ந்து நடத்தலாம். நீங்கள் தொடர்ந்து சிவில் வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும். விசாரணை நீதிமன்றம் இந்த சிவில் வழக்குகளை விரைந்து விசாரிக்கும் என நம்புகிறோம். எழுத்து பூர்வமான வாதங்களை அடுத்த 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து ஒபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
பொதுத்தேர்தல் வருவதால் எந்த பொறுப்பு வகிப்பது என்று தங்களிடையே குழப்பம் இருப்பதால் இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நான் அரசியல்வாதி இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்று நான் அறிவேன். தற்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுகவின் நிலை இன்னும் மோசமாகிவிடும். அதிமுகவில் பிளவு இருப்பது நன்றாக தெரிகிறது; அதற்கு கட்சியே தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.