சென்னை மாம்பலம் கோயில் வளாகத்தில் கடும் அடக்குமுறை உணர்வு: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும்போது, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப் பெரிய அச்ச உணர்வு இருந்தது. அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராஜ்பவன், தமிழ்நாடு எக்ஸ் தளப்பக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளதாவது:-

இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கோயில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப் பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் நிலவும் கொண்டாட்டங்கள், பண்டிகை சூழல்களிலிருந்து அது முற்றிலும் மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவி லக்ஷ்மி ரவி ஆகியோர், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று இன்று வழிபாடு செய்தனர்.