அத்வானி காலத்தை விட தற்போது பாஜகவில் வகுப்புவாதம் அதிகரித்துள்ளது என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்து உள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் கூறியதாவது:-
90 களை காட்டிலும் தற்போது பாஜகவின் வகுப்புவாத குணம் தீவிரமடைந்து உள்ளது. அத்வானி காலத்தில் தொடங்கிய இந்த வகுப்புவாதம் பாஜகவில் இப்போது இன்னும் தீவிரமடைந்து உள்ளது. அத்வானிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே எந்த விதமாக வித்தியாசமும் இல்லை. இருவரில் எந்த ஒருவரும் கூடுதலாகவோ குறைவாகவோ இதற்கு பொறுப்பாக மாட்டார்கள். பாபர் மசூதி இடிப்பில் இவர்கள் அனைவருக்கும் சமமான பொறுப்பு உள்ளது. என்னைப் பொறுத்தவரை, மோடிக்கும் அத்வானிக்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது. நான் பிரித்தாளும் அரசியலை செய்த அனைவருக்கும் எதிராக போராடினேன். நான் 1990 ஆம் ஆண்டுகளில் வகுப்புவாதத்திற்கு எதிராக இருந்தேன். இன்றும் தொடர்ந்து அப்படியே இருக்கிறேன். வகுப்புவாதத்திற்கு எதிரான எனது அரசியல் போராட்டம் இன்னும் மாறவே இல்லை.
இப்போது நடப்பது அப்பட்டமான வகுப்புவாத அரசியல்தான். ஒரு காலத்தில் இந்தியா எப்படி இருந்தது. இந்தியாவில் ராமர் கோவில் எந்த விதமான தாக்கத்தையும் விளைவிக்காது. ராமர் கோயில் திறப்பு என்பது பாஜக – ஆர்எஸ்எஸ் விவகாரம் என்ற காங்கிரஸ் கட்சியின் கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன். நாம் அனைவரும் ராமரின் விசுவாசிகள். ஆனால் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் முற்றிலும் அரசியலுக்கானது. இதற்கும் மத நம்பிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. மக்கள் இதை புரிந்துகொள்ள முடியும். இது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. மக்கள் நலனுக்காக ஒற்றுமையாக இருந்து போராடுவதே ஒரே வழி. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் சொல்வது தேர்தல் நோக்கத்தில் அல்ல. மண்டல் ஆணையம் வழங்கிய அறிக்கையின்போதே சமூக நீதிக்கான போராட்டத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மக்களை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்வது ஒன்று இரண்டு தேர்தல்களில் முடிந்துவிடாது. அது நீண்ட கால செயல்திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.