சங்கர்தேவ் ஜன்மஸ்தான் கோயிலுக்கு செல்ல ராகுலுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில், சென்னையில் போராட்டத்தில் குதிப்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருப்பதாவது:-
மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 6,000 கி.மீ. தூர இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை ராகுல்காந்தி நடத்தி வருகிறார். அசாம் மாநிலத்தில் தற்போது பயணம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அசாம் முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தூண்டுதலின் பேரில் ராகுல்காந்தி வாகனத்தை பின்தொடர்ந்து வந்த வாகனங்கள் மீது பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கார் தாக்கப்பட்டிருக்கிறது. புகழ் பெற்ற சங்கர்தேவ் ஜன்மஸ்தான் கோயிலில் ராகுல்காந்தி இன்று வழிபடுவதற்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. திடீரென்று நேற்று இரவு பா.ஜ.க. அரசு அனுமதியை ரத்து செய்து விட்டது. இன்று காலை கோயிலில் வழிபடுவதற்காக புறப்பட்ட ராகுல்காந்தியை காவல்துறையினர் தடுத்ததால் காலை 8.15 மணியிலிருந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்.
பா.ஜ.க. ஆட்சியில் எப்போது கோயிலுக்கு செல்லலாம், எப்போது வழிபடலாம் என்பதை அவர்களே முடிவு செய்கிற சர்வாதிகாரப் போக்கு அரங்கேறி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி தலைவர் ராகுல்காந்தி அவர்களை பின்தொடர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வின் வன்முறை செயலை கண்டித்தும், தலைவர் ராகுல்காந்தி அவர்கள் வழிபடுவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்ததற்கு எதிராகவும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எனது தலைமையில் இன்று (22.1.2024) மாலை 4.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.