“ஆளுநர் கூறியதைப் போல், இந்த ஆட்சியில், எந்தவிதமான அச்சுறுத்தலும் யாருக்கும் கிடையாது. தமிழகத்தில் ஏதாவது ஒருவகையில், ஆன்மிகத்துக்கு எதிராக இந்த ஆட்சி இருப்பது போல சித்தரிக்க வேண்டும் என்பதற்காக, ஆளுநரும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயிலைத் திறக்கும் நிகழ்ச்சிக்காக, தமிழகத்தில் உள்ள கோயில்களில் எந்தவிதமான தடையும், எவ்விதமான விசேஷத்துக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. குறிப்பாக இன்று இரண்டு ராமர் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நகரத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், முள்ளங்குடியில் உள்ள கோதண்டராமர் கோயிலிலும் இன்று குடமுழுக்கு நடைபெறுகின்றது.
கோயில்களுக்கு குடமுழுக்கு செய்வதென்பது அரிதாக இருந்த நிலையில், இந்த ஆட்சியில்தான், தமிழக முதல்வரின் உத்வேகம் மற்றும் பரிபூரண நல்லாசியுடன் அதிகமான குடமுழுக்கு நடைபெறுகிறது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்து கோயில்களிலும் அனைத்து பக்தர்களும் சுதந்திரமாக வழிபடவும், விரும்பு பஜனைப் பாடல்களைப் பாடவும், தமிழக அரசு எந்தவிதமான தடையையும் யாருக்கும் விதிக்கவில்லை. அதேநேரம் இன்று மட்டும் 20 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. இம்மாத இறுதிக்குள் 31 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது” என்றார்.
அப்போது அவரிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது, என்று கூறியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “ஆளுநர் இன்று காலையிலே சென்ற கோயிலில், பரிபூரணமாக ஆளுநருக்கு உண்டான அனைத்து வரவேற்புகளுடன், சிவப்புக் கம்பளம் விரித்து சிறந்த முறையில், அவர் தரிசனம் செய்துள்ளார். ஆளுநர் கூறியதைப் போல், இந்த ஆட்சியில், எந்தவிதமான அச்சுறுத்தலும் யாருக்கும் கிடையாது. என் அருகில் அமர்ந்திருப்பவர்கூட ஒரு பட்டர்தான். அச்சுறுத்தல் இருந்தால் அருகில் அமர்வாரா?
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல, ஆளுநருக்கு யாரைப் பார்த்தாலும் அப்படி தோன்றுகிறது போல. ஆளுநர் வந்துசென்றபின், அந்த கோயிலின் பட்டர் மோகன், “எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் இல்லை. எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை. நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்” என்று அவர் கூறியிருக்கிறார்.
கோயில் மற்றும் கோயில் அர்ச்சகர் நலனையும் பாதுகாக்கின்ற ஆட்சி என்றால் அது திராவிட மாடல் ஆட்சிதான். கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஓய்வு பெற்றபிறகு பொங்கல் பண்டிகையின்போது, கருணைக் கொடையாக ரூ.1000 வழங்கியது தமிழக முதல்வர்தான். புத்தாண்டில் இரண்டு செட் புத்தாடைகளை வழங்கியதும் இந்த ஆட்சிதான். அர்ச்சகர்களின் ஓய்வுகால தொகையை ரூ.4000-ஆக உயர்த்தி வழங்கியதும் இந்த ஆட்சியில்தான்.
இந்த ஆட்சி வந்தபிறகுதான், ரூ.81 கோடி செலவில், 6 இடங்களில் அர்ச்சகர்களுக்கு குடியிருப்புகளைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே, கோயில் அர்ச்சகர்கள் எங்களுக்கு தோளோடு தோள் கொடுக்கிற நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். தெய்வத்துக்கு அடுத்தபடியான அனைத்துவிதமான மரியாதைகளையும் அரச்சகர்களுக்கு இந்த அரசு தந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏதாவது ஒருவகையில், ஆன்மிகத்துக்கு எதிராக இந்த ஆட்சி இருப்பது போல சித்தரிக்க வேண்டும் என்பதற்காக, ஆளுநரும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.