அசாமில் ராகுல் காந்தியின் நியாய யாத்திரை தடுத்து நிறுத்தம்!

சட்டம் – ஒழுங்கு காரணங்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அசாம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகலாந்து வழியாக தற்போது அசாம் வந்துடைந்துள்ளது. அசாமில் நியாய யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்குள்ள ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவா சத்ராவில் இன்று (ஜன.22) சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். துறவி, அறிஞர், சமூக – மத சீர்திருத்தவாதியான ஸ்ரீமந்த சங்கர்தேவா, அசாம் கலாச்சாரம், மத வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக அறியப்படுகிறார். ஆனால், அந்தக் கோயிலுக்குச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இது தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, “சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி என்னைத் தடுத்துள்ளனர். வைஷ்ணவ மத புனிதர் ஸ்ரீமந்த சங்கரதேவ பிறப்பிடத்துக்கு என்னைத் தவிர வேறு யார் சென்றாலும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை வராது என்பதுபோல் அரசு நடந்துள்ளது. கவுரவ் கோகோய் சென்றால் பிரச்சினை இல்லை. ஆனால், நான் சென்றால் பிரச்சினையாகுமாம். இதற்குப் பின்னால் வேறேதும் காரணம் இருக்கலாம். ஆனால், நான் இன்னொரு முறை வாய்ப்பு கிட்டும்போது படத்ராவா கோயிலுக்குச் செல்வேன். அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே சங்கரதேவ் வகுத்த பாதையை பின்பற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

அதேபோல், அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் இன்று ராகுல் காந்தி தெருமுனைப் பிரச்சாரங்களுக்குத் திட்டமிட்டிருந்த நிலையில், அவரை அந்த மாவட்டத்துக்கு வர வேண்டாம் என்று மாவட்ட காவல் ஆணையார் வலியுறுத்தியுள்ளார். ராகுல் வருவதால் சில விஷமிகள் மாவட்ட அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், “உளவுத் துறை தகவலின்படி, ஒரே நாளில் ராமர் கோயில் கும்பாபிஷேகம், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற இரு நிகழ்வுகள் நடைபெறுவதை ஒட்டி சில சமூக விரோதிகள் பரபரப்பான சூழலைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடலாம். இதனால் மாவட்ட அமைதிக்கும் குந்தகம் ஏற்படலாம். அதனால் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருந்தது.