இந்து மக்களின் உரிமையைப் பறிக்க முயற்சி நடந்தால் சட்டப்பூர்வமாக போராடுவோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் எல்இடி திரையின் மூலம் இன்று சிறப்பு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். தனியார் கோயில்களில் ஒளிபரப்ப தடையில்லை என நீதிமன்றம் கூறியதையடுத்து நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தெரிவித்த பிறகே எல்இடியில் பார்க்க முடிந்தது. செய்யும் முறையை மாற்றிக் கொள்ளாமல் மக்களை கஷ்டப்படுத்தி இருக்கிறது திமுக அரசு. எல்இடி தொழில் செய்யும் வியாபாரிகள் அனைவரும் அரசின் அடக்குமுறையால் கஷ்டப்பட்டார்கள். காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு ஆதிக்கத்தை காட்ட முயற்சி செய்தது அறநிலையத்துறை. இந்து மக்களின் உரிமையைப் பறிக்க முயன்றால் சாலையில் இறங்கி கத்தும் செயல்களில் ஈடுபட மாட்டோம். இந்து மக்களின் உரிமையைப் பறிக்க முயற்சி நடந்தால் சட்டப்பூர்வமாக போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.