அதிராம்பட்டினம் பெண்கள் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அரசு அதிகாரிகள் அகற்றினர்!

அதிராம்பட்டினம் மக்களின் 11 நாள் தொடர் போராட்டத்தை தொடர்ந்து இமாம் ஷாபி என்ற சிறுபான்மை பெண்கள் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அரசு அதிகாரிகள் அகற்றினர்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது இமாம் ஷாபி (ரஹ்) பள்ளிக்கூடம். இதன் பெண்கள் பள்ளி அரசுக்கு சொந்தமான இடத்தில் குத்தகைக்கு எடுத்து இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தை வாங்க பள்ளி நிர்வாகம் விருப்பம் தெரிவித்தது. தமிழ்நாடு அரசு விற்பதற்கு முன் வந்தது. இந்த நிலையில் அப்போது பேரூராட்சி துணைத் தலைவராக இருந்த திமுகவை சேர்ந்த ராம குணசேகரன் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதினார். ஆனால், அந்த கடிதம் உள்நோக்கத்துடன் எழுதப்பட்டதாக கூறி முன்னாள் தஞ்சை ஆட்சியர் கருணாகரன் நிராகரித்தார். இதனை தொடர்ந்து அந்த இடத்தை விட்டு இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் காலி செய்ய வேண்டும் என பேரூராட்சி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கீழ் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த நவம்பர் மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளை நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் மேல்முறையீடு செய்து உள்ளது.

இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி இமாம் ஷாபி பழைய பள்ளி வளாகத்தை நகராட்சி நிர்வாகம் புல்டோசருடன் வந்து சீல் வைத்து பள்ளி இரும்பு போர்டை புல்டோசரால் உடைத்தது அதிராம்பட்டினம் மக்களை கொந்தளிப்படைய செய்தது. சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாபியின் மீது நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. கடந்த வியாழக்கிழமை முதல் இமாம் ஷாபி பழைய பள்ளிக்கு வெளியே அதிராம்பட்டின மக்கள் ஷாகின் பாக் பாணியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் பங்கெடுத்தனர். இரவு பகல் பாராமல் விடிய விடிய 11 நாட்கள் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா கலந்துகொண்டார். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்தன.

அதேபோல், வெல்பேர் கட்சி மாநில தலைவர் அப்துர் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் முஹம்மது கவுஸ், ஐ.எம்.எம்.கே. கட்சித் தலைவர் ஹைதர் அலி, எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், ஹுமாயுன் கபீர், அதிமுக மாவட்ட செயலாளர் சிவி சேகர் உள்ளிட்டோர் நேரடியாக போராட்டக் களத்திற்கு வருகை தந்து மக்களுக்கும் இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்துக்கும் ஆதரவு தெரிவித்தனர். இது அல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் பள்ளிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக முஸ்லீம் லீக் நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுவதுடன், நகராட்சி துணைத் தலைவராக உள்ள திமுக நகர செயலாளர் குணசேகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தைக்கு பிறகு பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலையும், பூட்டையும் அதிகாரிகள் அகற்றினர். அத்துடன் பள்ளி இடத்தை ஜப்தி செய்வதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் வைக்கப்பட்ட பேனரும் அகற்றப்பட்டது. 3 நாட்கள் பள்ளிக்குள் இரு தரப்பும் செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த சீல் அகற்றப்பட்டதை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் போராட்டக் குழுவினர் வலியுறுத்தி உள்ளார்கள்.