அதிமுகவில் இணைந்தார் உசிலம்பட்டி திமுக நகராட்சி சேர்மன் சகுந்தலா!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக நகராட்சி சேர்மன் சகுந்தலா, தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அண்ணா அறிவாலயத்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆளுங்கட்சியின் நகர்மன்றத் தலைவராக இருக்கும் ஒருவர் எதிர்க்கட்சியில் இணைவது என்பது தமிழக அரசியல் களத்தில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் வேட்பாளராக செல்வி என்பவரை திமுக அறிவித்தது. ஆனால் சகுந்தலா போட்டி வேட்பாளராக களமிறங்கி திமுக நகராட்சி தலைவரானார். சகுந்தலாவை போட்டி வேட்பாளராக களமிறக்கி நகராட்சி சேர்மனாக வெற்றி பெற வைத்ததற்காக உசிலம்பட்டி திமுக நகரச் செயலாளர் தங்கமலை பாண்டி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மதுரை செல்லவுள்ள நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு நகராட்சி சேர்மனையே அதிமுக பக்கம் கொண்டு வந்து தனது அரசியல் சாதுர்யத்தை காட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

எத்தனை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினாலும், ஓராயிரம் திட்டங்கள் கொண்டு வந்தலும் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக திகழ்வது என்னவோ கீழ்மட்ட நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் தான். ஆனால் ஏனோ தெரியவில்லை அண்மைக்காலமாக திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் பலரும் இணைந்து இணைந்து வருகின்றனர். தேனி மாவட்டம் தாமரைக்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், என பல பகுதிகளில் நடந்த நிகழ்வை இதற்கு உதாரணமாக கூறலாம். பொதுவாகவே உசிலம்பட்டி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. அங்கு திமுகவை சேர்ந்த ஒருவர் நகர்மன்றத் தலைவராக இருப்பது கட்சிக்கு தான் ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்பட்டது. இப்போது அதற்கும் வேட்டு வைக்கும் விதமாக திமுக நகர்மன்றத் தலைவராக இருந்த சகுந்தலாவை அதிமுக பக்கம் அனுப்பிவிட்டார்கள்.